by Staff Writer 06-03-2019 | 8:24 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
நெல்லிற்கு நிர்ணய விலையை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக அமைந்தது.
54 நீர்பாசனத் திட்டங்களை கேந்திரமாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தேசிய ஒன்றிணைந்த விவசாய அமைப்பு தெரிவித்தது.
பொலன்னறுவை - எலஹெர விவசாய சம்மேளனத்தின் விவசாயிகள் தம்புள்ளை - மஹியங்கனை பிரதான வீதியின் பக்கமுன நகரை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பக்கமுன - எலஹெர விவசாய சம்மேளனத்தின் 42 விவசாய அமைப்புகள் பங்கேற்றிருந்தன.
அனுராதபுரம் - ராஜாங்கனை, 5 கட்டை பிரதேசத்தில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிரித்தலே விவசாய சம்மேளனத்தின் ஹபரண - பொலன்னறுவை பிரதான வீதியின் ஜயந்திபுர சந்தியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மின்னேரியா - ஹிங்குரக்கொட பிரதான வீதியின் ஹிங்குரக்கொட நகருக்கு அருகிலும் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தளம் - சாலியவெவ நகரிலுள்ள விவசாய சேவை நிலைய முன்றலில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கலென்பிதுனுவெவ நகர மத்தியிலும் விவசாயிகள் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அம்பலந்தொட்ட நகர மத்தியில் ரிதிகம ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல் அறுவடையை பெறுவதற்காக பெருந்தொகை நிதியை செலவிட வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
உரம், விவசாய இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட செய்கைக்கு தேவையான பல பொருட்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்படாததுடன், வௌிநாடுகளில் இருந்தே அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையால் விவசாயிகளின் செலவு படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றது.
இதனால் பல மாதங்களாக சிரமப்பட்டு செலவை ஈடு செய்ய நியாயமான இலாபமொன்றை ஈட்டக்கூடிய வகையில் அறுவடைக்கான விலையை நிர்ணயிப்பது கொள்கை வகுப்பாளர்களின் பொறுப்பு அல்லவா?
இவற்றை உரிய முறையில் முகாமைத்துவப்படுத்த முடியாவிடின், விவசாயிகள் நெற் செய்கையை கைவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை.