இலங்கையின் வெற்றி இலக்கு 252 ஓட்டங்களாக நிர்ணயம்

தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டி: இலங்கையின் வெற்றி இலக்கு 252 ஓட்டங்களாக நிர்ணயம்

by Staff Writer 06-03-2019 | 8:50 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 252 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க களத்தடுப்பை தெரிவு செய்தார். இலங்கை அணியில் அவிஷ்க பெர்னாண்டோ, கசுன் ராஜித ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதுடன், உபுல் தரங்கவும் லக்சான் சந்தகேனும் நீக்கப்பட்டனர். ஆட்டத்தை ஆரம்பித்த தென் ஆபிரிக்கா சார்பாக குவின்டன் டி கொக் மற்றும் ரீசா ஹென்ரிக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டிற்காக 91 ஓட்டங்களைப் பகிர்ந்தது. ரீசா ஹென்ரிக்ஸ் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க குவின்டன் டி கொக் 70 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பெற்று தென் ஆபிரிக்க அணியை வலுப்படுத்தினார். அணித்தலைவர் ஃபெப் டு பிலெசிஸ் 57 ஓட்டங்களைப் பெற்றதுடன் சர்வதேச ஒருநாள் அரங்கில் 5000 ஓட்டங்களைக் கடந்தார். தென்னாபிரிக்க அணி ஒரு கட்டத்தில் 36.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்களுடன் வலுவாக இருந்தாலும் எஞ்சிய 5 விக்கெட்களும் 31 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. அதன்படி, தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டம் 45.1 ஓவரில் 251 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. பந்து வீச்சில் திசர பெரேரா 3 விக்கெட்களையும் லசித் மாலிங்க, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.