இருண்ட யுகத்திற்கு இட்டுச்செல்லும் டொலர் தேசப் பயணம்

by Staff Writer 06-03-2019 | 7:02 PM
Colombo (News 1st) படகுகள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்பவர்கள் தொடர்பில் அரசினால் பல்வேறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும் பயணங்கள் முற்றுப்பெறாத நிலையே தொடர்கின்றது. எதிர்காலம் சிறக்க வேண்டும் என்ற கனவுடன் முன்னெடுக்கப்படும் ஆபத்தான பயணங்கள் இருண்ட யுகத்தை நோக்கியே இட்டுச் செல்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2018 - 2019 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 268 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், இந்தக் காலப்பகுதிக்குள் 20 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படையின் தரவுகள் குறிப்பிடுகின்றன. 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில், 4,679 சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கடற்படை கைது செய்துள்ளது. 2012ஆம் ஆண்டில் அதிகளவாக 3008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வருடத்தில் 111 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பி அனுப்பப்படுவீர்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுக்கும் செய்தியை க.காந்தரூபனின் வாழ்க்கை உறுதிப்படுத்துகிறது. முல்லைத்தீவு - கள்ளப்பாடைச் சேர்ந்த இவர் 2012 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா நோக்கி படகில் பயணித்தார். எனினும், கிறிஸ்துமஸ் தீவில் இரண்டரை மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான காந்தரூபன் தற்போது கடற்றொழிலில் ஈடுபட்டாலும் அவரால் பொருளாதார சுமையிலிருந்து மீள முடியவில்லை. காந்தரூபனின் வாழ்க்கை பலருக்கும் ஓர் எடுத்துக்காட்டு. தமது கோரிக்கை உரியவர்களை சென்றடையும் பட்சத்தில், உயிரைப் பணயம் வைக்கும் பேராபத்து மிகு கடற்பயணம் முற்றுப்பெறும் என்பதே காந்தரூபனின் நம்பிக்கை.