தரவுகளில் வேறுபாடு: பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வீழ்ச்சியடைந்துள்ளது - எம்.ஏ. சுமந்திரன்

by Staff Writer 05-03-2019 | 7:54 PM
Colombo (News 1st) வரவு செலவுத் திட்ட உரையில் கூறுவதும் உள்ளடக்கப்பட்டுள்ள விடயமும் வெவ்வேறானது என அரச நிதி செயற்குழுவின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்த புள்ளிவிபர அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என இன்று லங்காதீப பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பகிரங்கப்படுத்தப்படாத உண்மையான ஆவணம், அதனை தயாரிப்பவர்களிடம் உள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். அரச நிதி செயற்குழுவின் செயற்பாடுகளின் போது எதிர்கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, லங்காதீப பத்திரிகைக்கு நீண்ட விளக்கமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழங்கியுள்ளார். உண்மையான புள்ளிவிபரங்கள் நாட்டிற்கோ மக்களுக்கோ வெளிக்கொணரப்படாததுடன், இது சிறிது காலமாக வரவு செலவுத் திட்டத்தின் போது இடம்பெறும் விளையாட்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 5 வருட சர்வதேச கடன் தொடர்பில் ஆராயும் போது 52.8 வீத வேறுபாடொன்றை அரச கணக்கியல் செயற்குழு இனங்கண்டுள்ளது. சர்வதேச கடனை டொலரில் செலுத்துவதால் ஏற்றத்தாழ்வு காணப்படுவதாக அது தொடர்பில் வினவிய போது அதிகாரிகள் கூறியதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்றத்தாழ்வு காணப்படலாம். எனினும், பாரிய இடைவெளிகளுடன் இவ்வாறான நிலை தோன்றாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இல்லாத வருமானம் மற்றும் உண்மையான செலவுகளை விட குறைந்த செலவை காண்பிக்கும் புள்ளிவிபர விளையாட்டாக இது மாறியுள்ளமையால், நாட்டு மக்களுக்கு செலவு செய்ய குறைந்த நிதியே எஞ்சுவதாக எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். அமைச்சர்கள் மாற்றமடையும் போது, நீக்கப்படும் சில வாகனங்கள் குறைந்தபட்சம் 6, 7 மாதங்களேனும் பயன்படுத்தப்படுவதில்லை எனவும், புதிய வாகனமொன்று புதிய அமைச்சருக்கு கிடைத்தவுடன் பழைய வாகனத்திற்கு என்ன நடந்தது என்பது எவரும் அறியாதவொன்று எனவும் அரச நிதி செயற்குழு இனங்கண்டுள்ளது. அவ்வாறான வாகனங்கள் தொடர்பான ஆவணம் எதுவும் பேணப்படவில்லை எனவும் செயற்குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். அரச நிதி செயற்குழு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நடத்திய கூட்டத்தில் எரிபொருள் விலை சுட்டெண்ணை கோரிய போதிலும், இதுவரையில் அது வழங்கப்படவில்லை என்பதுடன், மாதாந்த எரிபொருள் விலைப் பட்டியலை மாத்திரம் செயற்குழுவுக்கு அனுப்பியுள்ளனர். நிதி அமைச்சின் அதிகாரிகள் குறைந்தபட்சம் இறுதிக்கூட்டத்திலேனும் பங்கேற்கவில்லை என எம்.ஏ. சுமந்திரன் பத்திரிகைக்கு கூறியுள்ளார். தேசிய வரவு செலவு திணைக்களம் நிதி அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனம் என கூறும் சுமந்திரன், அங்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் இருப்பதுடன், நிதி செலவிடும் இடமாக அது இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படாத மேலதிக விடயங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் விஞ்ஞானப்பூர்வமற்றதாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காண்பிக்கப்படும் புள்ளிவிபர அறிக்கை , உண்மை மற்றும் யதார்த்தத்திற்கு இடையேயான இடைவெளிக்கு அமைய, நாட்டின் பொருளாதார நெருக்கடி நாம் எண்ணியதை விட மோசமானது என கருதுவதாக அரச நிதி செயற்குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.