சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வுபெறும் இம்ரான்

சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வுபெறும் இம்ரான் தாஹிர்

by Staff Writer 05-03-2019 | 10:54 AM
Colombo (News 1st) ​தென்னாபிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் (Imran Tahir) எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான இம்ரான் தாஹிர் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் சர்வதேச ஒருநாள் அறிமுகம் பெற்றார். இதுவரையில் 20 டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள இம்ரான் தாஹிர், 57 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 95 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இம்ரான் தாஹிர் அதில் 156 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். சர்வதேச ஒருநாள் அரங்கில் அவரது அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியானது 45 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களாக காணப்படுகின்றது. சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இம்ரான் தாஹிரின் அதிசிறந்த பந்துவீச்சு பெறுதி 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களாக பதிவாகியுள்ளது. சர்வதேச ஒருநாள் அரங்கில் தென்னாபிரிக்கா சார்பாக வேகமாக 150 விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளையோருக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு தான் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறுவதற்குத் தீர்மானித்ததாக இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.