பாராளுமன்ற பிரவேச வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

கிராம உத்தியோகத்தர்களின் எதிர்ப்பினால் பொலிஸ் பாதுகாப்புடன் பாராளுமன்றம் சென்ற உறுப்பினர்கள்

by Staff Writer 05-03-2019 | 8:43 PM
Colombo (News 1st) இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் இன்று பாராளுமன்ற பிரவேச வீதியை மறித்து நடத்திய எதிர்ப்பு நடவடிக்கையினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது வாகனங்களில் இருந்து இறங்கி பொலிஸ் பாதுகாப்புடன் பாராளுமன்றத்திற்கு செல்ல நேரிட்டது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையிலான வாக்குவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும் தலையீடு செய்ய நேரிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்கவிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வு வழங்கும் நோக்கில், ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 5 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்துச்செல்ல பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது இணக்கம் தெரிவித்தார் . சேவை யாப்பு உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர் சேவையில் தாக்கம் செலுத்திய 17 கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையைக் கண்டித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதனால் பாராளுமன்ற பிரவேச வீதியை தற்காலிகமாக மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.