இந்தியாவுக்கு வழங்கிய வர்த்தகசலுகை இரத்து- ட்ரம்ப்

இந்தியாவுக்கு வழங்கிவந்த வர்த்தக சலுகை இரத்து- ட்ரம்ப் அறிவிப்பு

by Staff Writer 05-03-2019 | 1:23 PM
Colombo (News 1st) இந்தியாவுக்கு கடந்த 42 ஆண்டுகளாக வழங்கிவந்த வர்த்தக சலுகையை இரத்துச் செய்வதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், சுங்க வரிகள் எவையுமின்றி பல பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்துவதற்கு ட்ரம்ப் உத்தேசித்துள்ளார். இந்திய - அமெரிக்க அரசாங்கங்களுக்கு இடையே இடம்பெற்ற தீவிரமான பேச்சுவார்த்தைக்குப் பின்பும், இந்தியச் சந்தைக்குள் அமெரிக்க நிறுவனங்கள் செயற்படுவதற்கான நியாயமான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு இந்திய அரசு எவ்விதமான உறுதியும் அளிக்காதமையால், தான் இந்த முடிவை எடுப்பதாக அமெரிக்க நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வளர்ந்துவரும் நாடு என்ற அடிப்படையில், 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 5.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதிகளுக்கு சுங்கவரி விதிப்பற்ற சலுகையை இந்தியா அனுபவித்துவருவதாக குறித்த கடிதத்தில் ட்ரம்ப் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இருந்தபோதிலும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா மிக அதிகளவிலான வரியை விதிப்பதுடன், இந்திய சந்தைக்கான அமெரிக்காவின் நியாயமான அணுகுமுறைகளை உறுதிசெய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் டரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா வழங்கிவரும் இந்தச் சலுகைப் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்குவது தொடர்பான முடிவு குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் இந்திய அரசுக்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னர், அதற்கான உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திடுவார் எனவும், இது நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 60 நாட்கள் ஆகும் எனவும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையே அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையில் சுமுகமான உறவுகள் இருந்துவரும் நிலையில், வர்த்தக உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது. 2017 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், இந்தியா மீது மேற்கொண்ட பாரிய நடவடிக்கையாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.