அனைவருக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சேவை

அனைவருக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொலிஸ் சேவையை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 05-03-2019 | 7:55 AM
Colombo (News 1st) அனைவருக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொலிஸ் சேவையொன்றையே, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தாம் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் திணைக்களத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த பிரிவுகளில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் அதிகாரிகள் தௌிவுபடுத்தியுள்ளனர்.
நான் பொலிஸ் திணை்ககளத்தைப் பொறுப்பேற்று, இரண்டரை மாதங்கள் வரை கடந்துள்ள நிலையில், போதைப்பொருள் கடத்தல், பாதாளக்குழு குற்றங்கள் தொடர்பிலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுகின்றது. அதற்காக நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். பொலிஸ் திணைக்களம் என்ற வகையில் நாட்டிற்கு ஆற்றப்படும் சேவைகள் பொறுப்பு வாய்ந்ததாகும். சட்டவிரோதமாக செயற்படும் நபர்களுக்கு, பதவி, கட்சி என தராதரம் பாராது சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதையே நான் அனைவரிடமும் எதிர்பார்க்கின்றேன். குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் நான் ஒருபோதும் செயற்பட்டதில்லை
என ஜனாதிபதி இதன்போது கருத்துத் தெரிவித்திருந்தார்.