விசாரணைகளுக்காக பங்களாதேஷ் செல்லும் பொலிஸ் குழு

போதைப்பொருள் விசாரணைகளுக்காக பங்களாதேஷ் செல்லும் பொலிஸ் குழு

by Fazlullah Mubarak 04-03-2019 | 8:10 AM

தெஹிவளை - இரத்மலானை பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதத்திற்குள் கண்டறிந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழுவொன்று பங்களாதேஷுக்கு சென்றுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பங்களாதேஷூக்கு பயணித்துள்ளனர். குறித்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பங்களாதேஷ் பிரஜைகள் ஐவர் பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளதுடன் , நாட்டிலிருந்து அங்கு சென்ற விசேட குழு, தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். 5 நாட்கள் பங்களாதேஷில் தங்கவுள்ள பொலிஸ் விசேட குழு, அந்நாட்டின் பொலிஸ்மா அதிபர் மற்றும் போதைப்பொருள் பிரிவின் தலைவரையும் சந்திக்கவுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பங்களாதேஷின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி 388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பங்களாதேஷ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். டிசம்பர் 31 ஆம் திகதி தெஹிவளையில் 278 கிலோகிராம் ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.