தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகக்குழு தெரிவு

by Staff Writer 04-03-2019 | 8:37 PM
Colombo (News 1st) தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகக்குழு இன்று (04) தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகக்குழு ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. கூட்டணியின் தலைவராக திரு.த. இராசலிங்கமும் செயலாளர் நாயகமாக திரு. வீ. ஆனந்தசங்கரியும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் சிரேஷ்ட உபதலைவர், நிர்வாக செயலாளர் உள்ளிட்டோருடன் கூட்டணியின் 46 மத்திய செயற்குழு அங்கத்தவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது கட்சியின் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான அதிகாரப்பகிர்வு கொண்ட, ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இணைந்த வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்ற நிலைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பினை நடாத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அதேபோன்று தண்டனை வழங்கி சிறைத்தண்டனையை அனுபவிக்கும் அரசியல் கைதிகளை, பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாகும். யுத்த காலத்திலும், இறுதிக்கட்ட போரின்போதும் சரணடைந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச பிரதிநிதிகள் உள்ளடக்கிய விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை செய்து உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை, இலங்கை அரசையும் இதனுடன் தொடர்புடைய சர்வதேச நாடுகளையும் கேட்டுக்கொள்வதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கவனிப்பாரற்ற நிலையிலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இராசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் மற்றும் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை போன்ற பல்வேறு தொழிற்சாலைகளையும் புனரமைத்து அனைத்துத் தரப்பினருக்கும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அரசை கூட்டணி வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்