கும்பமேளா இன்றுடன் நிறைவு - கின்னஸிலும் இடம்

கும்பமேளா இன்றுடன் நிறைவு - பல கின்னஸ் சாதனைகளையும் தன் பெயரில் பதிந்து கொண்டது

by Fazlullah Mubarak 04-03-2019 | 1:57 PM

உத்தரபிரதேசத்தில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த கும்பமேளா இன்றுடன் நிறைவடைகிறது.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் இடமான பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி மாதம் 15ஆம் திகதி மகா கும்பமேளா கோலாகலமாகத் தொடங்கியது. இதற்காக சகலவசதிகள் கொண்ட தற்காலிக நகரம் உருவாக்கப்பட்டதுடன் உலகின் மிகப்பெரிய தற்காலிக நகரம் என்ற சிறப்பை இது பெற்றது. பொலிவூட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவரும் சமூக ஆர்வலருமான லட்சுமி நாராயண திரிபாதி தலைமையில் திருநங்கைகளின் பிரமாண்ட நடன நிகழ்ச்சிகளும் இம்முறை சிறப்பம்சமாகும். வழிபாட்டு நிகழ்வாக இருந்தாலும் உலக சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன. கும்பமேளா பதாகைகளைத் தாங்கி 500 பேருந்துகள் வரிசையாக சாலையில் அணிவகுப்பு நடத்தின. இது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. இதேபோல் 8 மணி நேரத்தில் 7,664 பேர் உள்ளங்கை அச்சு பதித்த நிகழ்வும் கின்னஸ் சாதனையானது. 55 நாட்களாக நடந்த கும்பமேளா விழா மகா சிவராத்திரியன்று நிறைவடைவதால் இதை சிறப்பிக்கும் வகையில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.