பிள்ளைகளை தம்மோடு இணைக்குமாறு பெற்றோர் கோரிக்கை

பிரித்த பிள்ளைகளை தம்மோடு இணைக்குமாறு பெற்றோர் கோரிக்கை

by Chandrasekaram Chandravadani 03-03-2019 | 1:42 PM
Colombo (News 1st) தம்மிடமிருந்து பிரிக்கப்பட்ட பிள்ளைகளை மீண்டும் தம்மோடு இணைக்குமாறு குடியேற்ற பெற்றோர்கள், அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குக் புகலிடம் கோரிச்சென்றபோது கைது செய்யப்பட்ட குடும்பங்களிலிருந்த, பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், நேற்றையதினம் மீண்டும் மெக்ஸிக்கோ எல்லையைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த பெருமளவானோர் தமக்கு அகதி அந்தஸ்து வழங்குமாறும் தம்மிடமிருந்து பிரிக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தம்முடன் மீண்டும் இணைக்குமாறும் வினயமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். மெக்ஸிக்கோ எல்லையைக் கடந்து அமெரிக்காவிற்குள் நுழைந்த பலர் அங்கு அமெரிக்க சுங்கத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தாக இதனை நேரில் கண்ட சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு வந்தவர்களில் சிலர் குழந்தைகளுடனும், பொதிகளைத் தம்வசமும் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருகைதந்த குடியேற்றவாசிகள் அகதி அந்தஸ்து பெறுவதற்காகவும் பிள்ளைகளைத் தம்முடன் இணைத்துக் கொள்வதற்காகவும் சட்ட நிறுவனங்களிலுள்ள சட்டத்தரணிகளை நாடியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.