நிர்ணய விலையின்மையால் விவசாயிகள் நட்டாற்றில்

நிர்ணய விலையின்மையால் விவசாயிகள் நட்டாற்றில் - நாளை மறுதினம் வரவு செலவுத்திட்டமும் சமர்ப்பிப்பு

by Fazlullah Mubarak 03-03-2019 | 8:16 PM

நிர்ணய விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படாமையால் நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்போக அறுவடை முடிவடைந்த நிலையில் நெல்லினை விற்பனை செய்வதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சிய வசதிகள் இன்மையால் மன்னார் மாவட்டத்தின் மடு பகுதி விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லினை தனியாருக்கு விற்பனைசெய்ய ​வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு மூடை நெல்லினை சுமார் 2,150 ரூபாவிற்கு தனியார் கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நெல்லினை களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகள் இருக்குமாயின், நெல்லினை களஞ்சியப்படுத்தி, சுமார் 3,500 ரூபாவிற்கு விற்பனை செய்யமுடியும் என விவாயிகள் கூறுகின்றனர். நெல்லிற்கான விலை வீழ்ச்சியடைந்துள்ளமையால் செலவீனங்களை கூட ஈடு செய்யுமளவிற்கு வருமானத்தினை ஈட்ட முடியவில்லை என விவசாயிகள் கவலை வௌியிடுகின்றனர். அரசாங்கம் நெல்லிற்கான நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும். அம்பாறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளிலும் நெற் களஞ்சியசாலைகள் இன்னமும் திறக்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக தனியார் துறையினர் குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்துவருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் அவ்வாறு அல்லலுறும் நிலையில், 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாட்டின் வருடாந்த பொருளாதார திட்டம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கான நிதி ஒதுக்கும் செயற்பாடாக வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது. எனினும் கடந்த சில வருடங்களாக நாட்டில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்கள் ஊடாக நாட்டிற்கு முன்வைத்த பொருளாதார கொள்கை மூலம் யதார்த்தமான நிலைமை ஏற்பட்டுள்ளதா என்பதனை ஆராய வேண்டும். கடந்த வருடத்திற்காக அரசாங்கம் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தை முதலில் ஆராய்வோம். இந்த வரவு செலவுத் திட்டத்தில் விவசாயத்துறை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. விவசாயத்துறைக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைகளில்...
♦சிறிய மற்றும் மத்திய தர குளங்களின் சேறு சகதியை நீக்குதல் ♦பொலன்னறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் விவசாய உற்பத்திகளை சேகரிப்பதற்காக 3 களஞ்சியசாலைகளின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்தல். ♦நெல், கிழங்கு, சோளம் , மிளகாய், பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு காலநிலையை அடிப்படையாக வைத்து காப்புறுதி திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தல் அதில் முக்கியமானது.
மீனவ சமூகத்தை இலக்காக வைத்து அனைத்து வரவு செலவுத் திட்டங்களின் போது பிரேரணைகள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறே கடந்த வரவு செலவுத் திட்டத்திலும் பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. ♦மோட்டார் படகுகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க குளிரூட்டி செலவின் 50 வீதத்தை அரசாங்கம் செலுத்தல். ♦55 அடியை விட நீளமான மோட்டார் படகுகளுக்கு ஏற்படும் செலவுகளில் 50 வீதத்தை அரசாங்கம் ஈடுசெய்தல் ♦ மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் ♦ கடலட்டை பிடிப்பதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் உற்பத்தி வலயம் ஒன்றை ஸ்தாபித்தல் ♦ நீரியல்வள பூங்காவின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் சிறிய மற்றும் நடுத்தர வர்க்க வியாபாரிகளை மேம்படுத்துவதற்காகவும் 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுகள் வழங்கப்பட்டன. ♦ சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் கடன் பெறும்போது சாட்சியாளர்கள் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளை தளர்த்தல் ♦ சிறிய மற்றும் நடுத்த வியாபாரிகளுக்காக நிதியம் ஒன்றை உருவாக்க 500 மில்லியனை ஒதுக்குதல் ♦ என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற பெயரில் புதிய கடன் திட்டத்தை ஆரம்பிக்க 750 மில்லியன் ரூபா ஒதுக்குதல் என்பன முக்கியமானவை. இந்த சூழ்நிலையல் இம்முறை வரவு செலவுத் திட்டம் மக்கள் பலன் பெறும் வகையில் அமையுமா?