இந்தியா மீதும் வரி விதிக்க வேண்டும் - ட்ரம்ப்

இந்தியா மீதும் வரி விதிக்க வேண்டும் - ட்ரம்ப்

by Staff Writer 03-03-2019 | 7:22 AM
Colombo (News 1st) தமது பொருட்கள் மீது விதிக்கப்படும் அதிக வரிகளுக்கு இணையாக இந்தியா மீதும் வரி விதிக்க வேண்டும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா அதிகூடிய வரி விதிக்கும் நாடு எனக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அந்த வரியை ஈடு செய்வதற்கு தமது நாட்டினாலும் வரி விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதற்காக இந்தியா விண்ணப்பித்துள்ள பொருட்கள் மீது வரி விதிக்கவுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் மோட்டார்சைக்கிளுக்கு 100 வீத வரி விதிக்கப்படும்போது, இந்தியா தமது நாட்டுக்கு அனுப்பும் மோட்டார்சைக்கிளுக்கு தாம் எவ்வித வரியையும் விதிப்பதில்லை எனவும் மாநாடொன்றில் உரையாற்றும்போது ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க உற்பத்திகள் மீது இந்தியா அதிகூடிய வரி விதிப்பதாக முன்னர் குற்றஞ்சாட்டியிருந்த ட்ரம்ப், இந்தியா மகிழ்ச்சியடையும் வகையிலான ஆரம்பகட்ட வர்த்த உடன்படிக்கை தேவைப்படின், தமது நாட்டுடன் உடனடி வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். கடந்த ஒக்டோபர் மாதத்தில் தீர்வைகளின் அரசனாக இந்தியா திகழ்ந்ததாகவும் அவர் விபரித்துள்ளார். இந்த நிலையில், குறித்த விரிவிதிப்பு அறிவிப்பினை தற்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.