ஆசிரியர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை

ஆசிரியர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்குமாறு கோரிக்கை

by Staff Writer 03-03-2019 | 7:10 AM
Colombo (News 1st) பத்தரமுல்ல கல்வி அமைச்சிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து எழுத்துமூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு நெருங்கியவர்கள், கல்வி அமைச்சுக்குள் இருந்து இவ்வாறான தாக்குதல்களை தம்மீது மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிபர் - ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தின் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் மேடைகளில் தற்போது அதிகம் பேசப்படுவதாகவும் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். தம் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி, உரிய விசாரணைகளை மேற்கொள்வார் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த 28 ஆம் திகதி ஆசிரியர் சங்கங்கள் சில ஒன்றிணைந்து கல்வி அமைச்சுக்கு முன்னால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்களை மேற்கொண்டனர். ஆசிரியர், அதிபர்களுக்கான சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.