by Staff Writer 02-03-2019 | 3:30 PM
Colombo (News 1st) போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட நீதிமன்றமொன்றை ஸ்தாப்பிப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.
இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
போதைப்பொருளை கட்டுப்படுத்துதல் மற்றும் குற்றங்களைக் குறைப்பதற்கான சட்டமூலம் தொடர்பில் நேற்று (01) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் காலம் தாழ்த்தப்படுகின்றமையானது, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு தடையாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையை விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போது காணப்படும் மேல் நீதிமன்றத்தின் கட்டடத் தொகுதியிலேயே புதிய விசேட நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவது குறித்து மக்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதேவேளை, சிறைச்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றங்களை இழைத்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.