Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தன்னை பலவந்தமாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதாக முன்னாள் டெஸ்ட் அணித்தலைவரான நுவன் சொய்சா தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் நிராகரிக்கின்றேன். இந்திய பிரஜைகள் இருவர் என்னை சந்திக்க முயன்றமை குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவிக்காமையால் இன்று ICC எனக்கு நீண்டதொரு அறிக்கையை வழங்கியுள்ளது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊழல் குற்றச்சாட்டிலோ ஆட்ட நிர்ணயத்திலோ ஈடுபடவில்லை. கிரிக்கெட் விளையாட்டை பிழையான முறையில் பயன்படுத்தி தேவையற்ற முறையில் பணம் உழைக்கவும் இல்லை. எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களது வாழ்க்கையை நானே கவனிக்கின்றேன். எனது தொழில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ICC தொடர்பில் நான் ஒரு விடயத்தை குறிப்பிடுகிறேன். நான் கடந்த வருடம் ஆர்.பிரேமதாச மைதானத்தில் உடற்பயிற்சி நிலையத்தில் இருந்தபோது ICC-யின் அதிகாரிகள் எனக்கூறி வெள்ளை அதிகாரிகள் இருவர் சினமன் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். அந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய அனுமதியின்றி எனது தொலைபேசியை அவர்கள் பாவித்தார்கள். என்னுடைய மனைவியுடன் நான் தொலைபேசியில் உரையாடும் போது சிங்களத்தில் பேசுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை. ஆங்கிலத்தில் உரையாடுமாறு அச்சுறுத்தினார்கள். என்னை ஹோட்டலுக்கு அழைத்து வீடியோ கெமரோ ஒன்றை உட்புகுத்தி நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். மொழிபெயர்ப்பாளரின் உதவியையோ அல்லது வழக்கறிஞர் ஒருவரின் உதவியையோ பெற்றுக்கொடுக்கவில்லை. தொடர்ந்தும் என்னை அச்சுறுத்தினார்கள். இதனால் நான் உள ரீதியாக பாதிக்கப்பட்டேன். சில சந்தர்பத்தில் அவர்கள் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விகள் எனக்கு புரியவில்லை. அவர்களது உச்சரிப்பு எனக்கு புரியவில்லை. அவர்களது விசாரணைகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையாயின், எனது தொழில் இல்லாமல் போகும் என அச்சுறுத்தினார்கள். இந்த விசாரணையானது இரகசியமானது என கூறினார்கள். இதனால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் என்னுடைய தொழிலை இடைநிறுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இந்நாட்டு வீரர்களுக்கு எதிராக எவ்வாறான முறையில் விசாரணைகளை நடத்துகின்றார்கள் என்பது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வெளிக்கொணர்ந்தது.
முன்னாள் டெஸ்ட் அணித்தலைவரான நுவன் சொய்சா இன்று கூறிய விடயங்களில் மூலம் நியூஸ்ஃபெஸ்ட் வெளியிட்ட செய்தி உறுதியாகியுள்ளது.
சர்வதேச வீரர் என்ற ரீதியில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரை விசாரிப்பதற்கான வழிமுறையொன்று உள்ளது.
அவசரமாக மைதானத்திற்கு வந்து இவ்வாறு வீரர்களின் புகழுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் விதத்தில் ICC செயற்பட்டுள்ளதோடு , வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஊழல் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டுகின்றமை ஊர்ஜிதமாகியுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் சர்வதேசத்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இலங்கை மோசடியான நாடு என குறிப்பிட்டதோடு, வீரர்களின் புகழுக்கு இழுக்கை ஏற்படுத்தியது.