அபிநந்தனை நாளை விடுவிப்பதாக இம்ரான் கான் அறிவிப்பு

விமானி அபிநந்தன் வர்தமானை நாளை விடுவிப்பதாக இம்ரான் கான் அறிவிப்பு

by Bella Dalima 28-02-2019 | 5:09 PM
பாகிஸ்தானின் பிடியிலுள்ள இந்திய விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபிநந்தன் வர்தமான் நாளை (01) விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். சமாதானத்திற்கான நல்லெண்ண அடிப்படையில் அவரை விடுவிப்பதாக இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதன்போது, குறித்த விமானி பாகிஸ்தான் இராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டார். விமானி அபிநந்தனை இந்தியாவிற்கு பத்திரமாக அழைத்துவர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இருநாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்த நிலையில், அதனை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கின. இதனிடையே, அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என இந்திய மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழுவில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், ''அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார்'' என்று அறிவித்துள்ளார்.