இயந்திர வாள்கள் பதிவிற்கான கால அவகாசம் நிறைவு

இயந்திர வாள்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நிறைவு

by Staff Writer 28-02-2019 | 8:52 AM
Colombo (News 1st) மரங்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திர வாள்களைப் பதிவுசெய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (28) நிறைவுபெறுகின்றது. இதுவரையில் பதிவுசெய்யாத வாள்களை இன்றைய தினத்திற்குள் பதிவுசெய்வது அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள் அல்லது தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தப்படும் சகல இயந்திர வாள்களையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்று பதிவுசெய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவு செய்யும்போது வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. காடுகள் அழிக்கப்படுவதைக் கட்டுப்படுத்துதல், மரங்களை வெட்டும் இயந்திர வாள்களை கொண்டு முன்னெடுக்கப்படும் வியாபார செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மரங்களை வெட்டும் இயந்திர வாள்களுக்கு இன்று முதல் விசேட அனுமதிப்பத்திரம் மற்றும் இலக்கத்தகடுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது