by Staff Writer 28-02-2019 | 9:15 AM
Colombo (News 1st) எகிப்திய தலைநகர் கெய்ரோவில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, கெய்ரோவின் பிரதான ரயில் நிலையத்தில் ஏற்பட்ட இந்த விபத்தையடுத்து அங்கு பாரியளவில் தீ பரவியதாக, எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரம்செஸ் (Ramses) ரயில் நிலையத்திலுள்ள, ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பின் (Buffer Stop) மீது, குறித்த ரயில் மோதியுள்ளது.
இதனையடுத்து, ரயிலின் எண்ணெய்த் தாங்கி வெடித்துள்ளது.
இந்த விபத்திற்கான காரணம் தௌிவாகத் தெரியாதிருக்கின்ற நிலையில், விபத்து இடம்பெற்ற சில மணி நேரத்தின் பின்னர் அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாம் அரபாத் (Hisham Arafat) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், எகிப்தின் அலெக்ஸாண்ட்ரா நகரில் பயணிகள் ரயில்கள் இரண்டு மோதிய விபத்தில் 43 பேர் உயிரிழந்ததோடு, 100க்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.