முறிகள் மோசடி தொடர்பில் தடயவியல் கணக்காய்வை முன்னெடுக்க சர்வதேச கணக்காய்வாளர்கள் நியமனம்

முறிகள் மோசடி தொடர்பில் தடயவியல் கணக்காய்வை முன்னெடுக்க சர்வதேச கணக்காய்வாளர்கள் நியமனம்

முறிகள் மோசடி தொடர்பில் தடயவியல் கணக்காய்வை முன்னெடுக்க சர்வதேச கணக்காய்வாளர்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2019 | 6:56 am

Colombo (News 1st) மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்வதற்காக சர்வதேச கணக்காய்வாளர்களை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில வாரங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை விலைமனு கோரலுக்கான குழுவின் பணிகள், தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

தடயவியல் கணக்காய்வை மேற்கொள்வதற்காக சில சர்வதேச கணக்காய்வு சங்கங்கள் முன்வந்துள்ளன.

அவற்றில் முதல்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட சங்கங்களிலிருந்து தற்போது இறுதிக்கட்டத் தேர்வுகள் இடம்பெறுவதாக மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் ஆறு வகையான கணக்காய்வுகளை மேற்கொள்வதற்காகவே சர்வதேச கணக்காய்வாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

முறிகள் மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அந்த ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சிபாரிசுகளில், பேர்ப்பச்சுவல் ட்ரசரீஷ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள வேண்டும் என்பதே பிரதானமாக காணப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற மிகப் பெரிய நிதி மோசடியான மத்திய வங்கியின் முறிகள் மோசடி இடம்பெற்று 4 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.

எனினும், இதனுடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்