குளியாப்பிட்டியில் 120 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

by Staff Writer 28-02-2019 | 8:03 AM
Colombo (News 1st) குளியாப்பிட்டி - கும்புராபொல பகுதியில் 120 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் 27 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, 1 கிலோகிராம் ஹெரோயினுடன் மோட்டார்சைக்கிளில் பயணித்தபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பணியகம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை, கொழும்பு - கிரேண்ட்பாஸ் பகுதியில் 25 கிராம் 740 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்தபோதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்களிடமிருந்து 2,40,000 ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.