விமானியை விடுவிக்குமாறு இந்தியா வலியுறுத்தல்

விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தல்

by Bella Dalima 27-02-2019 | 10:25 PM
பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணையும் வெளியிட்டது. மேலும், சென்னையை சேர்ந்த விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமான் என்பவர் தனது பெயர், வயது, பதவி மற்றும் மதம் ஆகியவை தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வீடியோக் காட்சியை பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், காயமடைந்த இந்திய விமானப்படை வீரரின் படங்களை மோசமான வகையில் காட்சிப்படுத்துதல் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அனைத்து விதிமுறைகள் மற்றும் ஜெனிவா உடன்படிக்கையில் உள்ள சரத்துக்களை மீறும் வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள விமானி அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.