முறிகள் திருட்டு இடம்பெற்று 4 வருடங்கள் பூர்த்தி: மக்களை முட்டாள்கள் என நினைக்கின்றீர்களா?

by Staff Writer 27-02-2019 | 8:47 PM
Colombo (News 1st) மத்திய வங்கியில் முறிகள் மோசடி இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 30 வருடங்களில் பூரணத்துவம் அடையும் ஒரு பில்லியன் ரூபாவிற்கான முறிகளை ஏலத்தில் விடுவதற்காக மத்திய வங்கி அறிவித்தல் விடுத்திருந்தது. கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் அதன் மொத்தப் பெறுமதியை 20 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் ஆலோசனை வழங்கினார். மத்திய வங்கி அதிகாரிகளின் ஆட்சேபனை காரணமாக அந்தத் தொகை 10 பில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டது. இதனையடுத்து, ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகி மக்களின் கருத்து மேலோங்கியபோது முறிகள் விநியோக நடைமுறையை மாற்றுவதற்கு கட்டளை இட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பின்னர், ஊழல் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிட்டிபன குழுவை நியமித்தார். இந்த ஊழல் விவகாரத்தில் அர்ஜுன மகேந்திரன் சுற்றவாழி என குழுவினர் முடிவினை வௌியிட்டனர். டியூ குணசேகர தலைமையிலான கோப் குழுவின் இடைக்கால அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முதல் நாளில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. பிரதமர் வழங்கிய ஆலோசனையையே தாம் நடைமுறைப்படுத்தியதாக முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் வழங்கிய வாக்குமூலம் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக பின்னர் அம்பலமானது. தேர்தலின் பின்னர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவின் விசாரணை ஆரம்பமானது. 2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிக்குறிப்புகளுடன் கூடிய நீர்த்து போகச் செய்யப்பட்ட கோப் அறிக்கை வெளியாகியது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்தார். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி ஆணைக்குழு 11 மாதங்களாக விசாரணை நடத்தி தயாரித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. பின்னர் அது சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொறுப்புக்கூற வேண்டிய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்தது. அர்ஜுன மகேந்திரனுக்கு ஏற்கனவே அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிங்கப்பூரில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் சுதந்திரமாக செயற்படுவதுடன், நாட்டையும் நிர்வகிக்கின்றனர். மக்கள் ஒரு நாளும் இந்த திருட்டை மறக்கக்கூடாது என்பதுடன், வெள்ளைக் கழுத்துப்பட்டி திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மீண்டும் இத்தகைய குற்றங்கள் நிகழாதிருக்க உறுதி பூணவேண்டும்.