கணக்காய்வு சட்டமூலம் நிறைவேற்றப்படாததால் பிரச்சினை

கணக்காய்வு சட்டமூலம் நிறைவேற்றப்படாமையால் பிரச்சினை

by Staff Writer 27-02-2019 | 9:11 AM
Colombo (News 1st) கணக்காய்வு சட்டமூலம் இதுவரை நிறைவேற்றப்படாதமையால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக, கணக்காய்வு சேவை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் உத்தியோகத்தர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை கணக்காய்வு சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜீ.எம்.எம். குமாரசிங்க தெரிவித்துள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் காலம் தாழ்த்தப்பட்ட கணக்காய்வு ஆணைக்குழுவின் யாப்பு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்டது. சட்டமூலம் தயாரிக்கப்பட்டு 5 மாதங்கள் கடந்துள்ளபோதிலும் அதனை நிறைவேற்றுவதற்குத் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்படுவதாக ஜீ.எம்.எம். குமாரசிங்க கூறியுள்ளார். இது தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவிடம் வினவியபோது, கணக்காய்வு ஆணைக்குழுவின் சேவை யாப்பு தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும், சேவை யாப்பினை நிறைவேற்ற அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால், அது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி செயலாளரினால் ஐவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தாமதமாகியுள்ள சேவை யாப்பு தொடர்பிலான நடவடிக்கைகள் இந்த ஆணைக்குழுவினால் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.