ஏறாவூரில் மாட்டிறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவித்தல்

by Staff Writer 27-02-2019 | 9:06 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூரில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மாட்டிறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகளவிலான மாடுகள் இறந்து வருகின்ற நிலையில், ஏறாவூர் பகுதியிலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளை மூடுமாறு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது. ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழுள்ள அனைத்து மாட்டிறைச்சிக் கடைகளையும் மாடுகளை வெட்டும் இடங்களையும் மூடுமாறு பணிமனை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏறாவூரிலுள்ள மாட்டிறைச்சிக் கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தன. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, கிரான், வாகரை ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மாடுகள் இறக்கின்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. செங்கலடி - இலுப்பையடிச்சேனை பகுதியிலும் மாடுகள் இறந்துள்ளன. திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுண்டியாறு, வட்டமடு, தாவாறு போன்ற பகுதிகளிலும் தொடர்ந்து மாடுகள் இறந்து வருகின்றன.