by Staff Writer 27-02-2019 | 6:21 PM
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறிய இலங்கை அரசாங்கம் , தற்போது அதிலிருந்து விடுபடுவதற்கு முயற்சிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளதாகவும் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சதியை முறியடிப்பதற்கு, மனித உரிமை பேரவையில் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், அதன் ஏனைய செயற்பாடுகளையும் கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த சிரியா, மியன்மார் போன்ற நாடுகளுக்காக அமைக்கப்பட்டதைப் போன்று, சர்வதேச பொறிமுறையை உருவாக்க வேண்டும் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் குறிப்பிட்டுள்ளார்.