ஜனாதிபதி தலைமையில் தேசிய பொருளாதார சபை கூடியது

ETI கொடுக்கல் வாங்கல் முறைகேடுகள் தொடர்பில் தேசிய பொருளாதார சபையில் அறிக்கை சமர்ப்பிப்பு

by Staff Writer 26-02-2019 | 10:18 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பொருளாதார சபை இன்று கூடியது. தேசிய பொருளாதார சபையின் பொதுச்செயலாளர், பேராசிரியர் லலித் சமரகோன், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ETI வைப்பாளர்களுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், ETI நிதி நிறுவனத்தின் தற்போதைய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான கண்காணிப்பு அறிக்கை இன்று தேசிய பொருளாதார சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ETI நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்காக முன்வந்த மூன்று நிறுவனங்களில் இரண்டு உள்நாட்டு நிறுவனங்களுடன், குறித்த பிரிவு பாராமுகமாக செயற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தௌிவற்ற தன்மை காணப்படுவதாக தேசிய பொருளாதார சபை குறிப்பிட்டுள்ளது. முன்வந்த மூன்று நிறுவனங்களுக்கும் ஏலத்தின்போது சம சந்தர்ப்பம் வழங்கப்பட்டதா என்பதையும் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ETI நிறுவனத்தின் வைப்பீட்டில் 20 வீதம் மீண்டும் அந்த வைப்பீட்டாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 10 வீதம் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. நுண்கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பில் நிறுவனமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.