மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு நிறைவுகாண் பயிற்சி நியமனம் வழங்க இடைக்காலத் தடை 

by Staff Writer 26-02-2019 | 5:31 PM
Colombo (News 1st) அரச மருத்துவ பீடம் மற்றும் கொத்தலாவல மருத்துவ பீடத்தில் மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு நிறைவுகாண் பயிற்சி நியமனம் வழங்குவதை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றத்தினால் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியின் மூன்று மாணவர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஆராய்ந்த பின்னர் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 27 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பீ .பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துறைராஜா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மனுதாரர்களான மூன்று மாணவர்கள் அடங்கலாக 85 பேருக்கு நிறைவுகாண் பயிற்சி நியமனத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இவர்களுக்கு நியமனம் வழங்காது, அவற்றை ஏனைய சிலருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டமையானது அரசியலமைப்பினூடாக அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள சம அந்தஸ்திற்கான உரிமையை மீறுவதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மன்றுக்கு அறிவித்துள்ளார். இந்த மனுவின் பிரதிவாதிகளாக, சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, அமைச்சின் செயலாளர், இலங்கை மருத்துவ சபை, சட்ட மா அதிபர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட 06 பேர், பெயரிடப்பட்டுள்ளனர். சைட்டம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டத்தை பெற்ற பட்டதாரிகளுக்கு இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியைப் பெற தகுதி உள்ளது என உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள தீர்ப்பிற்கு அமைய, மேற்குறிப்பிட்ட விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மன்றுக்கு அறிவித்துள்ளார்.