தென் மாகாண விசேட விசாரணைப்பிரிவின் துப்பாக்கி களஞ்சியசாலைக்கு சீல் வைப்பு

by Staff Writer 26-02-2019 | 2:04 PM
Colombo (News 1st) ரத்கம பகுதியிலுள்ள வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின், துப்பாக்கிகள் களஞ்சியசாலைக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சீல் வைத்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு, தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவு அலுவலகத்திலும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மஞ்சுள அசேல மற்றும் ரஷீன் சிந்தக ஆகிய வர்த்தகர்கள் இருவரையும் அக்மீமன பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்துள்ளதுடன், சடலங்களை அழித்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் 15 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இடம் மாற்றுவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்தபோதிலும், அவர்களில் மூவர் இதுவரை கடமைக்கு சமூகமளிக்கவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தநிலையில், தென் மாகாண விசேட விசாரணை பிரிவில் மீதமுள்ள 10 உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்குவதற்கும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.