ஜனாதிபதி முறை இரத்தாவது மூலம் பயன் பெற வேண்டும்

ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதன் ஊடாக இலங்கை பயன் பெற வேண்டும்: ஜயம்பதி விக்ரமரத்ன

by Staff Writer 26-02-2019 | 10:04 PM
Colombo (News 1st) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஸவும் தெரிவித்துள்ள இணக்கப்பாட்டின் ஊடாக இலங்கை பயனை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன இராஜகிரியவில் நேற்று (25) தெரிவித்த இந்த கருத்து இன்றைய பத்திரிகையொன்றில் பிரசுரமாகியிருந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு ரணில் விக்ரமசிங்கவும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கூடிய விரைவில் அரசியலமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அதனை முன்னெடுக்க முடியும் என கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன கூறியுள்ளார். இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை பலப்படுத்தி இந்நாட்டை அராஜக நிலையில் இருந்து மீளக்கட்டியெழுப்பி, அபிவிருத்தியை நோக்கியும் ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை நிறுத்தியும் முன்னோக்கி செல்வதற்காக நாட்டை நேசிப்பவர்கள் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ வலியுறுத்தினார்.