செய்யாத கொலைக்காக தண்டனை அனுபவித்தவருக்கு இழப்பீடு

செய்யாத கொலைக்காக 38 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவருக்கு 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு

by Bella Dalima 26-02-2019 | 4:34 PM
தவறான கொலை குற்றச்சாட்டிற்காக 38 ஆண்டுகளை சிறையில் கழித்தவர் நிரபராதி என்று தெரிய வந்ததால், அவரை விடுதலை செய்ததுடன், 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடாக வழங்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்துள்ளது. தற்போது 71 வயதாகும் கிரேக் கோலே என்னும் அந்நபர் தனது முன்னாள் காதலி மற்றும் அவரது மகனை கொலை செய்ததாகக் கூறி 1978 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருந்தாலும், தான் குற்றமற்றவர் என கிரேக் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், அவரது வழக்கு மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, அவரது DNA மாதிரியின் மூலம் இந்த கொலை சம்பவத்திற்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இத்தனை நீண்ட காலத்திற்கு பிறகு ஒருவர் விடுவிக்கப்படுவது கலிஃபோர்னியாவின் வரலாற்றில் இதுவே முதன்முறையாக இருக்குமென கருதப்படுகிறது. இந்நிலையில், நீதித்துறையின் சார்பில் இழைக்கப்பட்ட தவறை மாற்ற முடியாவிட்டாலும், அவருக்கு நிவாரணத் தொகையை அளிப்பதன் மூலம் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.