சனத் ஜயசூரியவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை

by Staff Writer 26-02-2019 | 8:42 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சனத் ஜயசூரிய 2 வருடங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புடைய எந்தவொரு விடயத்திலும் ஈடுபட முடியாத வண்ணம் சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது. தமது நிறுவனத்தின் ஊழல் மோசடி கட்டுப்பாட்டு விதிகளை மீறியதன் காரணமாக சனத் ஜயசூரியவுக்கு இந்தத் தடையை விதிப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவு இரண்டு விடயங்களின் கீழ் சனத் ஜயசூரியவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. நியாயமான காரணமின்றி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவுடன் ஒத்துழைத்து செயற்பட தவறுகின்றமை அல்லது நிராகரிக்கின்றமை இல்லையேல் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவு மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்துகின்றமை அல்லது தாமதிக்கின்றமை ஆகிய இரண்டு விடயங்களே அவை. அந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டதால் சனத் ஜயசூரிய 2 வருடங்களுக்கு கிரிக்கெட்டுடன் தொடர்புடைய எந்தவொரு விடயத்திலும் ஈடுபட முடியாது என சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேவேளை, இது தொடர்பாக சனத் ஜயசூரிய ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ICC தமக்கு நிபந்தனை விதித்த தினத்திற்கு முன்பு தொலைபேசி சிம் அட்டையையும் தொலைபேசியையும் ஒப்படைக்காததால் தமக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளுக்கு நீண்ட நாட்கள் செல்வதால், தாம் அந்தக் குற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த வருடம் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் 2 வருடங்களுக்கு தடை விதித்துள்ளதாக சனத் ஜயசூரிய தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நாள் முதல் தாம் சுயாதீனமாகவே கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அது சார்ந்த சகல நடவடிக்கைகளில் இருந்தும் விலகியதாகவும், கிரிக்கெட் விளையாட்டுக்காக அளவற்ற சேவைகளை செய்த தமக்கு ஊழல் மோசடிகளில் ஈடுபட வேண்டிய தேவை இல்லை எனவும் சனத் ஜயசூரிய தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அலெக்ஸ் மாஷல் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த காலத்தில் இந்நாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு நடத்திய நாடகம் இலங்கை ரசிகர்களுக்கு இரகசியமானதல்ல. கிரிக்கெட் உலகில் இலங்கை மோசடியான நாடு என உலகுக்கு காட்டி, இந்நாட்டு விளையாட்டுத்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அவர்கள் அவ்வப்போது செயற்பட்டமை தொடர்பாக சந்தேகம் எழுகின்றது. இங்கிலாந்து விஜயத்திலிருந்தே இந்நாட்டு செயற்பாடுகளை பல்வேறு முறைகளில் நடைமுறைப்படுத்திய அலெக்ஸ் மாஷல் உள்ளிட்ட ICC-யின் ஊழல் தடுப்பு அணியால், இந்நாட்டு வீரர்கள் அல்லது அதிகாரிகள் எவ்விதத்திலும் ஆட்ட நிர்ணயம் உள்ளிட்ட விடயங்களில் தொடர்புபட்டுள்ளதாக இதுவரை நிரூபிக்க முடியவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை கிரிக்கெட்டின் நன்மதிப்பிற்கு மாத்திரமன்றி சர்வதேச அரங்கில் ஆற்றல்களை அபரிமிதமாக பரைசாற்றிய சனத் ஜயசூரிய போன்ற வீரர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தவே இவ்வாறானவர்கள் முயல்கின்றனர்.