கேப்பாப்புலவு நில விடுவிப்பிற்காக வாகனப் பேரணி

கேப்பாப்புலவு நில விடுவிப்பினை வலியுறுத்தி வாகனப் பேரணி

by Staff Writer 26-02-2019 | 7:55 PM
Colombo (News 1st) கேப்பாப்புலவு நில விடுவிப்பினை வலியுறுத்தி வாகனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கேப்பாப்புலவு நிலத்தினை விடுவிக்கக் கோரி 727 ஆவது நாளாகவும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வடக்கில் படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான கவனயீர்ப்பு வாகனப் பேரணியில் மக்கள் ஈடுபட்டனர். வாகனப் பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று ஜனாதிபதிக்கான மகஜரை உதவி மாவட்ட செயலாளரிடம் கையளித்தனர். அதனையடுத்து, வாகனப் பேரணி கிளிநொச்சியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தது. நில விடுவிப்பினை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. இதேவேளை, கேப்பாப்புலவு நில விடுப்பு தொடர்பிலான கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா, பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.