கஹவத்த துப்பாக்கிச்சூடு: 4 பிரதிவாதிகள் விடுவிப்பு

கஹவத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: 4 பிரதிவாதிகள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு

by Staff Writer 26-02-2019 | 4:54 PM
Colombo (News 1st) கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கஹவத்த நகரில் அரசியல் ஆதரவாளர்கள் சிலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தொடரப்பட்ட வழக்கின் 7 பிரதிவாதிகளில் 4 பிரதிவாதிகள் இன்று குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்ற நீதிபதி ரொஹான் ஜயவர்தன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை, ஒருவரை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. போதுமான சாட்சிகள் இல்லையென்பதால், பிரதிவாதிகளை விடுவிக்குமாறு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதன்போது, வழக்கின் முதலாவது, இரண்டாவது, மற்றும் மூன்றாவது பிரதிவாதிகளுக்கு எதிராக சாட்சிகள் உள்ளதால் அவர்களை விடுவிக்கவில்லை. 04 , 05, 06 மற்றும் 07 ஆம் பிரதிவாதிகளுக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லையென்பதால் அவர்களை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.  

ஏனைய செய்திகள்