இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டமை: விசாரணை ஒத்திவைப்பு

இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டமை குறித்த விசாரணை ஒத்திவைப்பு

by Staff Writer 26-02-2019 | 2:16 PM
Colombo (News 1st) 1996 ஆம் ஆண்டு 3 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அன்றைய தினம் மனுதாரர்கள் மற்றும் பிரதிவாதிகள் எழுத்துமூல சமர்ப்பணத்தை முன்வைக்குமாறு நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் உத்தரவிட்டுள்ளார். 1996 ஆம் ஆண்டு 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதுடன், காணாமலாக்கப்பட்டனர். இவர்களில் மூவரின் பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, காணாமலாக்கப்பட்டோர் சார்பில் என்ன நிவாரணத்தை எதிர்பார்க்கின்றீர்கள் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சைத்திய குணசேகர கேள்வியெழுப்பியுள்ளார். நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் தரப்பினர் தௌிவுபடுத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வலியுறுத்தியிருந்தார். எனினும், காணாமலாக்கப்பட்டோார் சார்பில் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், அதனை வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சைத்திய குணரத்ன தெரிவித்துள்ளார். அவரது பதிலை நிராகரித்த மனுதாரர்களின் சட்டத்தரணி, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வௌிப்படுத்த வேண்டும் என மீண்டும் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து, இரு தரப்பினரும் தமது எழுத்துமூலமான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். காணாமலாக்கப்பட்ட மூவரின் மனுக்கள் யாழ். மேல் நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்த வழக்கில் துமிந்த கெப்பிட்டிவெலான, இராணுவத் தளபதி, சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.