இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து ICC

இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை

by Staff Writer 26-02-2019 | 12:02 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை இரத்து செய்வது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என, சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பாகும். இன்னும் 3 மாதங்களில் இங்கிலாந்து மற்றும் ​வேல்ஸில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்காக சகல அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட புல்வாமா தாக்குதலில் 40 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை இரத்து செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னாள் தலைவர்களான சச்சின் டென்டுல்கர், சுனில் கவாஸ்கர், செளரவ் கங்குலி உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் உள்ளடங்குகின்றனர். இந்த நிலை குறித்து மத்திய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எடுக்கும் தீர்மானத்துக்கு மதிப்பளிப்பதாக அணித்தலைவர் விராட் கோஹ்லியும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை இரத்து செய்வது குறித்த இறுதித் தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. சர்வதேச விளையாட்டு அரங்கில் கிரிக்கெட்டானது உணர்வு மிக்க போட்டி எனவும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது சாதாரண கிரிக்கெட் ரசிகனின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பு எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி, மென்செஸ்டரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.