சோளம் பயிரிடும் காலம் குறித்து விவசாயத் திணைக்களம்

அறிவித்தல் விடுக்கும் காலத்தில் மட்டும் சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

by Staff Writer 26-02-2019 | 7:35 AM
Colombo (News 1st) சிறுபோகச் செய்கையின்போது, அறிவித்தல் விடுக்கும் காலத்தில் மாத்திரம் சோளப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயத் திணைக்களம், விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், மே மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சோளச் செய்கையை மேற்கொள்ள முடியும் என படைப்புழு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் அனுர விஜேதுங்க தெரிவித்துள்ளார். செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் காலத்தில், மீண்டும் படைப்புழுவின் தாக்கல் ஏற்படலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது 5 வீதம் வரை படைப்புழுவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக படைப்புழு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, படைப்பழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. படைப்புழுவினால் சேதமடைந்த செய்கை நிலங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் பணிப்பாளர் பந்துக வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையின்படி, இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.