போர்க்குற்ற விசாரணை நடாத்துவதில் கால அவகாசம் வழங்கக்கூடாது - சி.வி. விக்னேஸ்வரன்

by Staff Writer 25-02-2019 | 7:25 PM
Colombo (News 1st) ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றுவதிலோ, போர்க்குற்ற விசாரணையை நடாத்துவதிலோ அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சியில் இன்று நடாத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் சி.வி. விக்னேஸ்வரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உரிய மாற்று நடவடிக்கைகளை காலம் தாமதிக்காமல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவதானது மனித உரிமைகள் சபை தன்னைத்தானே ஏமாற்றுவது மாத்திரமல்லாது பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதாகவே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வடக்கு, கிழக்கில்அலுவலகங்களை திறக்க வேண்டும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அமுல்படுத்துவதற்கு மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச சமூகமும் தேவைக்கு அதிகமாகவே சகல விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கி நெகிழ் தன்மையைக் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இவற்றைத் துஷ்பிரயோகம் செய்யும் விதமாகவே இலங்கை அரசங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக சி.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இழைக்கப்பட்ட குற்றங்களை மறந்துவிடுவதுடன், விசாரணை எதுவும் தேவை இல்லை என பிரதமர் கூறி மக்களின் மனங்களைப் புண்படுத்தியுள்ளதுடன், நம்பிக்கையீனத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.