பொரளை விபத்து தொடர்பில் கைதான எண்மரில் 7 பேருக்கு பிணை

by Staff Writer 25-02-2019 | 7:12 PM
Colombo (News 1st) பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேரில் 7 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், குறித்த டிபென்டர் வாகனத்தை செலுத்திய உதேஷ் ரத்நாயக்க எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் இன்று புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் 27 வயதுடைய மகனும் அடங்குகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற டிபென்டர் வாகனத்தில் பயணித்த சந்தேகநபர்கள் ஐவர் மற்றும் ப்ராடோ வாகனத்தில் பயணித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்அ பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கடமை நிமித்தம் மோட்டார்சைக்கிளில் பம்பலபிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பொரளை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் சரத்சந்திர, பம்பலபிட்டி டீப்லி புல்லஸ் சந்தியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விபத்துக்குள்ளானார். விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.