இலங்கை அணி நாடு திரும்பியது

by Fazlullah Mubarak 25-02-2019 | 2:25 PM

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள் இன்று அதிகாலை தாயகம் திரும்பினர்.

தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரொன்றை வெற்றிகொண்ட முதல் ஆசிய அணியாக இலங்கை பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. இலங்கை டெஸ்ட் அணித்தலைவரான திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால், மிலிந்த சிறிவர்தன, லசித் எம்புல்தெனிய, லஹிரு திரிமன்ன, கௌஷால் சில்வா மற்றும் மொஹமட் சிராஷ் உள்ளிட்ட வீரர்களே இன்று அதிகாலை தாயகம் திரும்பினர். தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியது. இதன்மூலம் தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரொன்றை வெற்றிகொண்ட முதல் ஆசிய அணியாகவும் மூன்றாவது டெஸ்ட் அணியாகவும் இலங்கை பதிவானது. இலங்கை அணி வீரர்களை வரவேற்கும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சிறப்பு அதிதிகளை வரவேற்கும் மண்டபத்தில் நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது,
நாம் இலகுவாக இந்த வெற்றியை அடையவில்லை. அணி என்ற ரீதியில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றினோம். அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் தோல்வியடைந்தமையால் உள ரீதியான பாதிப்பை எதிர்நோக்கியிருந்தோம். அணி என்ற ரீதியில் ஒன்றிணைந்து விளையாடினோம். அதனாலேயே இந்த வெற்றி கிட்டியது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சர்வதேச அரங்கில் பிரகாசிக்க முடியும் என நம்பினோம். அதனுடைய விளைவே இந்த வெற்றி என நினைக்கிறேன். இந்தத் தொடருக்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டோம். அதன்படி வெற்றியீட்டியிருக்கிறோம்
என இலங்கை டெஸ்ட் அணியின் வீரர் சுரங்க லக்மால் தெரிவித்துள்ளார். இதன்பின்னர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மூன்று தொடர்களில் தோல்வியடைந்ததன் பின்னர் இந்தத் தொடரில் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பு கிட்டியது. அணியில் இடம்பெற்ற புதியவர்கள் அவர்களுடைய திறமையை நிரூபித்தார்கள். அதுவே வெற்றிக்கான காரணியாக அமைந்தது. அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். அனைவரும் ஒன்றிணைந்து விளையாடியதொரு தொடர் இது. கடந்த தொடர்களுடன் ஒப்பிடுகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அர்ப்பணிப்புடன் விளையாடினோம். இந்த மாற்றத்தையே தொடர்ந்து வரும் போட்டிகளிலும் மேற்கொள்ள எதிர்ப்பார்க்கின்றோம். அனைவரிடமும் திறமை காணப்பட்டது. அதனை வெளிப்படுத்துவதற்கான தேவை இருந்தது. 3 மாதங்களுக்கான தொடரில் பங்கேற்றோம். அதில் 2 தொடர்களில் தோல்விடையந்ததன் பின்னர் மனநிலையை மாற்றியமைப்பது இலகுவான ஒன்றல்ல. போட்டியில் வெற்றியீட்டுவதை காட்டிலும் அணியின் ஒற்றுமையை கட்டியெழுப்புவதே எனது ​நோக்கமாக இருந்தது. ஒருவரையொருவர் நம்பினார்கள். 11 வீரர்கள் விளையாடும்போது அனைவரும் ஒரே நோக்கத்துடன் செயற்பட வேண்டும். ஒருவர் அல்லது இருவர் அதிலிருந்து விலகும் பட்சத்தில் இலக்கை அடைய முடியாது
என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.