கொலம்பியாவுடனான உறவைத் துண்டிக்கும் வெனிசூலா

கொலம்பியாவுடனான இராஜதந்திர உறவைத் துண்டிக்கும் வெனிசூலா

by Staff Writer 24-02-2019 | 2:11 PM
Colombo (News 1st) கொலம்பியாவுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். வெனிசூலாவில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியை அடுத்து, அங்கு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. அரசியல் ரீதியில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள வெனிசூலாவிற்கான மனிதாபிமான உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், அந்நாட்டு இடைக்கால ஜனாதிபதி ஜூவான் குவைடோவால் எல்லைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், தமது நாட்டுக்கு சர்வதேசத்தின் உதவிகள் தேவையில்லை எனத் தெரிவித்து வெனிசூலா - கொலம்பியா மற்றும் பிரேஸில் எல்லைகளை மூடுமாறு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அந்நாட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இதுவரை நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் படையினரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இது மனித உரிமை மீறல் என சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்தத் தாக்குதல்களானது சர்வதேச சட்டத்தின்படி, "குற்றச் செயல்கள்" எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனிடையே, Puerto Rico விலிருந்து மனிதாபிமான உதவிகளை தாங்கிவந்த கப்பலுக்கு வெனிசூலா இராணுவத்தினரால் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, குறித்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.