கடல் எல்லையை மீறும் மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை

கடல் எல்லையை மீறும் வௌிநாட்டு மீனவர்கள் மீது கடுமையான சட்டம்

by Staff Writer 24-02-2019 | 10:23 AM
Colombo (News 1st) நாட்டின் கடல் எல்லையை மீறும் வௌிநாட்டு மீனவர்கள் மீதான சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான 2 சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக, திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதத்தில் மாத்திரம் 15 இந்திய மீனவர்கள் 7 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். புதிய சட்டங்களின் அடிப்படையில் குறித்த 7 படகுகள் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்யாணி ஹேவாபத்திரண கூறியுள்ளார். அத்துடன், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை, இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மீண்டும் இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார், எவ்வாறாயினும், வௌிநாட்டு மீனவர்கள் தொடர்பில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தினால், ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது இந்திய மீனவர்களின் வருகை குறைவடைந்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.