ரத்கம வர்த்தகர்கள் கொலை: உறவினர்களும் பிரதேச மக்களும் ரயில் மார்க்கத்தை மறித்து ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 23-02-2019 | 8:25 PM
Colombo (News 1st) ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வர்த்தகர்களின் உறவினர்களும் பிரதேச மக்களும் காலி வீதி மற்றும் கரையோர ரயில் மார்க்கத்தை ரத்கமவில் மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 9.20 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலி வீதியை மறித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, அங்கிருந்து 50 மீட்டர் தூரத்திலுள்ள ரத்கம - தொடங்கொட வீதியின் ரயில் குறுக்கு வீதிக்கு அருகில் கரையோர ரயில் மார்க்கத்தை மறித்து மற்றுமொரு குழுவினர் நண்பகல் 12 மணியளவில் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர். இதனால் ரஜரட்ட ரெஜின ரயில் மற்றும் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஆகியன சுமார் ஒரு மணித்தியாலம் ரத்கம மற்றும் கஹவ ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காலி உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று பிற்பகல் 2.30 அளவில் சம்பவ இடத்திற்குச் சென்று மார்க்கத்தை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பில் ஈடுபட்டனர். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அதிகாரிகளையும் கைது செய்வதாக காலி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசித டி சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் வழங்கிய வாக்குறுதியின் பின்னர், காலி வீதியில் 6 மணித்தியாலத்திற்கும் அதிக நேரமும் கரையோர ரயில் மார்க்கத்தில் சுமார் 4 மணித்தியாலமும் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை பிற்பகல் 3.45 அளவில் நிறைவு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.