மஹபலுகஸ் குளத்தை சுத்தப்படுத்திய V-FORCE குழுவினர்

by Staff Writer 23-02-2019 | 6:21 PM
Colombo (News 1st) நாட்டிற்கு சேவையாற்ற அர்ப்பணிப்பு செய்துள்ள V-FORCE இளம் தலைவர்கள் இன்று மற்றுமொரு சேவையில் ஈடுபட்டனர். உலக மரபுரிமையான ஆற்றுப்படுகை கட்டமைப்பிற்கு சொந்தமான மஹபலுகஸ் குளத்தை சுத்தப்படுத்தும் பாரிய செயற்பாட்டை முன்னெடுத்தனர். வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையகத்தில் இருந்து மஹவ பிரதேசத்திற்கு மக்கள் சக்தி V-FORCE குழுவினர் இன்று காலை புறப்பட்டனர். குருநாகல் மாவட்டத்திலுள்ள 25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த குளத்தில் நீர்த்தாவரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. மாகடுவாவ, இஹலகோன்வெவ, கும்புல்லேகம, ஹிதோகடவல, மொரகொல்ல, மெடியாவ உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், நாளாந்த தேவைக்கும் விவசாய செயற்பாடுகளுக்கும் இந்த குளத்தில் இருந்தே நீரைப் பெற்றுக்கொள்கின்றனர். பாசி, செல்வீனியா மற்றும் புற்கள் போன்ற தாவரங்களால் குளத்து நீர் மூடப்பட்டுள்ளதுடன், 5 ஏக்கர் பரப்பளவு நீர் மாத்திரமே களைகளற்று காணப்படுகின்றது. பல வருடங்களாக புனரமைக்கப்படாது காணப்பட்ட மஹபலுகஸ் குளத்தை சுத்தப்படும் நடவடிக்கையில் V-FORCE இளம் தலைவர்கள் இன்று ஈடுபட்டனர். வடமேல் மாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுஜீவ பெரேராவின் வழிகாட்டலில் கடற்படை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. கிரவுன் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம் இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது. மொரட்டுவை, வடமேல், ருஹூனு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்கள், சர்வதேச இளையோர் அமைப்பான ஐசக் அமைப்பின் உறுப்பினர்களும் இந்த செயற்பாட்டுடன் இணைந்துகொண்டனர். மக்கள் சக்தி குழுவினர், நியூஸ்ஃபெஸ்ட் குழாத்தினர், MIM எனப்படும் Maharaja Institute of Management நிறுவனத்தின் டிப்ளோமா மாணவர்களும் ஆர்வமாக இதில் கலந்துகொண்டிருந்தனர். மஹவ பிரதேச செயலகம், பொலிஸார், கமநல சேவைகள் திணைக்களத்தின் குருநாகல் மாவட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளும் பாரிய ஒத்துழைப்பை வழங்கினர். இதேவேளை, தொண்டர் படையணி உறுப்பினர்கள் பாராட்டப்பட்டதுடன், அவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு அமைய பதக்கங்களும் வழங்கப்பட்டன. மக்கள் சக்தி V-FORCE இன் முதலாவது கட்டம் சிகிரியாவில் நடைபெற்றதுடன், இரண்டாம் கட்டம் நீர்கொழும்பு முஹந்திரம்பிட்டி களப்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக இரத்தினபுரியில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நீண்டகால திட்டத்துடன், களுகங்கைக்கு இருமருங்கிலும் 4000 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. நான்காவது கட்டம் தெதிகம - மஹபல்லேகம கினிவிட்ட கனிஷ்ட வித்தியாலயத்தை கேந்திரமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது.