மன்னாரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு வழங்கப்பட்ட திடீர் இடமாற்றம் இரத்து

by Staff Writer 23-02-2019 | 8:45 PM
Colombo (News 1st) மன்னாரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு வழங்கப்பட்ட திடீர் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கியிருந்தார். கடந்த 21 ஆம் திகதி கட்டளையை மீறி பயணித்த லொறியொன்றை பின்தொடர்ந்து சென்று கைப்பற்ற மன்னார் - வெல்லங்குளம் பொலிஸ் காவலரணில் கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நடவடிக்கை எடுத்தனர். அந்த சந்தர்ப்பத்தில் லொறியை வீதியில் கைவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளார். லொறியில் இருந்து பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றின் பெறுமதி 8 இலட்சத்திற்கும் அதிகம் என பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் லொறி பதிவு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்ட மன்னார் - இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும், அத்தியாவசிய சேவை காரணமாக இன்று முதல் அமுலில் வரும் வகையில், யாழ் - கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுவதாகக் குறிப்பிடப்பட்டது. லொறியின் உரிமையாளர் அந்த பொலிஸ் பிரிவிலேயே வசிக்கின்றார். ஒழுக்கத்தை மீறி இரவுநேர ரோந்து சேவையில் ஈடுபட்டமையால், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டதாக இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போது வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ கூறினார். இரவுநேர ரோந்து பணிகளில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவர்கள் அதனை மீறியுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். எவ்வாறாயினும், அந்த இடமாற்றத்தை இரத்து செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இன்று மாலை குறிப்பிட்டார்.