பிரதமரிடம் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது

போதைப்பொருள் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள்: பிரதமரிடம் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது

by Staff Writer 23-02-2019 | 4:33 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவின் அறிக்கையை நாளை மறுதினம் (25) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்க வௌியிட்ட கருத்து தொடர்பில், குழு முன்னிலையில் தௌிவுபடுத்தியுள்ளதாக குறித்த குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார். கொக்கைன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டுள்ளதாக பேராசிரியர் ஆஷூ மாரசிங்க கூறினார். அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதமரினால் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நியமிக்கப்பட்ட குறித்த குழுவில் அமைச்சர் எரான் விக்ரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க மற்றும் நிஷ்ஷங்க நாணயக்கார ஆகியோர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். இந்த குழு நேற்று முதற்தடவையாக பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது. இந்த குழு முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வாக்குமூலம் அளித்திருந்தார்.