அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை

சர்வதேச இருபதுக்கு இருபது அரங்கில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை

by Staff Writer 23-02-2019 | 9:41 PM
சர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த அணியாக ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அயர்லாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் இந்த சாதனையை படைத்தது. Dehra மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கானி 48 பந்துகளில் 73 ஓட்டங்களை விளாசினார். அதிரடியுடன் வானவேடிக்கை நிகழ்த்திய Hazratullah Zazai 16 சிக்சர்கள் 11 பவுண்டரிகளுடன் 62 பந்துகளில் 162 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார். இது சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் ஏதேனுமொரு அணிக்கு எதிராக வீரர் ஒருவரால் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். Hazratullah Zazai தான் சந்தித்த முதல் 31 பந்துகளில் 66 ஓட்டங்களையும் அடுத்த 31 பந்துகளில் 96 ஓட்டங்களையும் விளாசியமை குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஏரோன் பின்ச் முதலிடத்தில் நீடிப்பதோடு, அவர் 172 ஓட்டங்களைக் குவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்களைக் குவித்தது. இது சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் ஓர் அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகப் பதிவானது. இந்த சாதனை ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமாக இருந்ததுடன், அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 263 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.