ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஐ.தே.க கட்சிக்குழு விசாரணை

போதைப்பொருள் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள்: ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஐ.தே.க கட்சிக்குழு விசாரணை

by Staff Writer 22-02-2019 | 10:26 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் குழு இன்று அவரை அழைத்து அது தொடர்பில் விசாரித்தது. சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான இந்தக் குழுவில் எரான் விக்ரமரத்ன, நிஷ்ஷங்க நாணயக்கார மற்றும் ஆஷூ மாரசிங்க ஆகியோர் அடங்குகின்றனர். இன்று பாராளுமன்றக்குழு அறையொன்றில் அவர்கள் ரஞ்சன் ராமநாயக்கவிடம் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டனர். இதனையடுத்து ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாவது,
ஒழுக்காற்று நடவடிக்கைகளை நால்வர் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்தனர். நான் நடிகன் என்பதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றனர். அமைச்சரவையின் முன்னாள் நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிடுகிறார். விஜயதாஸ ராஜபக்ஸ குறிப்பிடுகின்றார். போதைப்பொருள் பாவனையாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். நான் சொன்னதற்கு மேல் சென்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெருமளவிலானோர் இருப்பது மொட்டில். எம்மில் சிலர் இருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தகவல்களில்லை. ஜே.வி.பியின் 6 பேர் தொடர்பில் அவ்வாறு முறைப்பாடுகள் இல்லை. விமல் வீரவன்ஸவின் கட்சியில் இருவர் இருக்கின்றனர். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 10-க்கும் மேல் இருக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியில் மூன்று, நான்கு பேர் இருக்கின்றனர். பிவிதுரு ஹெல உறுமயவில் கம்மன்பில மட்டுமே உள்ளார். அவர் தொடர்பில் தகவல் இல்லை.