பாராளுமன்ற மோதல்: தவறிழைத்த உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை

by Staff Writer 22-02-2019 | 6:11 PM
Colombo (News 1st) கடந்த நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல்களின் போது 60 பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளை இழைத்துள்ளதாக, அது தொடர்பில் ஆராய்ந்த குழு தெரிவித்துள்ளது. தவறிழைத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக 77 நிலையியல் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது. 2 தொடக்கம் 4 வாரங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற சேவையை இடைநிறுத்தத் தேவையான விடயங்கள் இந்த நிலையியல் கட்டளைகளுக்குள் காணப்படுகின்றன. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் 55 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், நால்வர் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இதில் உள்ளடங்குகின்றார். மக்கள் விடுதலை முன்னணியின் விஜித்த ஹேரத், ஐக்கிய தேசியக் கட்சியின் பாலித்த தெவரப்பெரும, ரஞ்சன் ராமநாயக்க, சந்திம கமகே மற்றும் துஷார இந்துனில் ஆகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற சிறப்புரிமை சட்டத்தை மீறியுள்ளனர். எஸ்.பி.திசாநாயக்க, ஆனந்த அளுத்கமகே, பிரசன்ன ரணவீர, பியல் நிஷாந்த, பத்ம உதயஷாந்த, டிலான் பெரேரா, தினேஷ் குணவர்தன, லொஹான் ரத்வத்த, ஜயந்த சமரவீர, ரோஹித்த அபேகுணவர்தன, திலங்க சுமதிபால, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, திலும் அமுணுகம, இந்திக்க அனுருத்த, சிசிர ஜயக்கொடி, கஞ்ஜன விஜேசேகர, பியங்கர ஜயரத்ன, சுசந்த புஞ்ஜிநிலமே, பவித்ரா வன்னிஆராய்ச்சி, மஹிந்தானந்த அளுத்கமகே, ரஞ்ஜித் சொய்சா, எஸ்.எம்.சந்திரசேன, டி.வி.சானக்க, அருந்திக்க பெர்னாண்டோ, டலஸ் அழகப்பெரும, விமலவீர திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, தேனுக விதானகமகே, அனுராத ஜயரத்ன, சாரதி துஷ்மந்த, சனத் நிஷாந்த, கனக ஹேரத், உதய கம்மன்பில, தாரானாத் பஸ்நாயக்க, விமல் வீரவன்ச, நிமல் லங்சா, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஜனக பண்டார தென்னக்கோன், ரமேஷ் பத்திரண, விஜித்த பேருகொட, மொஹான் டி சில்வா, ரொஷான் ரணசிங்க, நிஷாந்த முத்துஹெட்டிகம, பிரேமலால் ஜயசேகர, துலிப் விஜேசேகர, வாசுதேவ நாணயக்கார, சி.பீ.ரத்நாயக்க, டி.பி.ஏக்கநாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தாரக பாலசூரிய, லக்ஷ்மன் வசந்த பெரேரா, ஜானக்க பாலசூரிய, பந்துல குணவர்தன, எஸ்.பிரேமரத்ன மற்றும் சாலிந்த திசாநாயக்க ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களாவர். பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கத்தியைப் போன்றதொரு பொருளை வைத்திருந்ததாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கத்தியைப் போன்றதொரு பொருளை தனது காற்சட்டைக்குள் இருந்து வௌியே எடுத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொள்ளும் சுயாதீன விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து, சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என குழு பரிந்துரைத்துள்ளது. பிரதி சபாநாயகரின் தலைமையிலான இந்த விசாரணைக் குழுவில், சமல் ராஜபக்ஸ, ரஞ்ஜித் மத்தும பண்டார, மாவை சேனாதிராசா, சந்திரசிறி கஜதீர மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். குழுக்கூட்டத்தில் சமல் ராஜபக்ஸ கலந்துகொள்ளாமை குறிப்பிடத்தக்கது.